ஜூன்,14,2013. உலக அளவில் இரத்தம் தேவைப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும்வேளை, ஒவ்வொரு நாடும் தன் நாட்டினருக்குத் தேவைப்படும் இரத்தத்தை, அந்நாட்டின் தன்னார்வத் தொண்டர்களிடமிருந்தே தானமாகப் பெறும் திட்டத்தை 2020ம் ஆண்டுக்குள் நிறைவேற்றுமாறு WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
தற்போது 60 விழுக்காட்டு நாடுகள் தங்களுக்குத் தேவையான இரத்தத்தைத் தங்களது மக்களிடமிருந்தே பெறுகின்றன என்றும், இவற்றில் 35 விழுக்காடு அதிக வருவாய் உள்ள நாடுகள் என்றும் WHO நிறுவனம் கூறியுள்ளது.
ஜூன் 14 இவ்வெள்ளிக்கிழமையன்று அனைத்துலக இரத்த தானம் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள உலக நலவாழ்வு நிறுவனம், இன்றைய உலகின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இன்னும் பலர் இரத்த தானம் செய்வதற்கு முன்வருமாறு கேட்டுள்ளது.
2004ம் ஆண்டில் 80 இலட்சம் பேர் இரத்த தானம் செய்தனர், ஆனால் இவ்வெண்ணிக்கை 2011ம் ஆண்டில் ஏறக்குறைய 8 கோடியே 30 இலட்சமாக உயர்ந்தது, ஆயினும் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது WHO நிறுவனம்.
உலகில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 10 கோடியே 70 இலட்சம் பேர் இரத்த தானம் செய்கின்றனர், இவர்களில் பாதிப்பேர் பணக்கார நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
No comments:
Post a Comment