ஜப்பான் மக்கள் என்று சொன்னதும் மனதில் அவர்களைக் குறித்த ஒரு மரியாதை உருவாகிறது. இதற்குக் காரணம்... நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கையின் விளைவுகளைச் சந்திக்கும்போதும்,அணுகுண்டு போன்ற மனித எதிர்ப்புக்களைச் சந்திக்கும்போதும் இவர்கள் காட்டும் கட்டுப்பாடும், ஒழுங்கும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
ஜப்பான் மக்கள் என்றதும் அடுத்து நம் கவனத்தை ஈர்ப்பது அந்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை. அந்நாட்டின் மக்கள் தொகையில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை 21 விழுக்காட்டிற்கும் அதிகம். வயது முதிர்ந்தோர் எண்ணிக்கை விழுக்காட்டில் ஜப்பான் உலக நாடுகளில் முதலிடம் வகிக்கிறது.
தற்போது ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து, வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை கூடிவரும் நிலை காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், 2050ம் ஆண்டுக்குள் ஜப்பானில் வயது முதிர்ந்தோர் எண்ணிக்கை, நாட்டு மக்கள் தொகையில் 40.5 விழுக்காடாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் வாழும் மக்களின் சராசரி வாழ்நாள் அளவுடன் ஒப்பிட்டால், ஜப்பான் மக்களின் வாழ்நாள், பொதுவாக 4 ஆண்டுகள் கூடுதலாக உள்ளது.
ஜப்பான் மக்களிடையே ஏறத்தாழ 100 விழுக்காட்டினர் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள். இந்நாட்டில் 4 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே வேலையற்றோர் எண்ணிக்கையில் உள்ளனர்.
ஜப்பானில் உள்ள பல தொழிற்சாலைகளில் காலையில் தொழிலாளிகள் வந்து சேர்ந்ததும், அவர்களுக்கு உடற்பயிற்சிகள் நேரம் ஒதுக்கப்படுகிறது. இவர்கள் செய்யும் உடற்பயிற்சிகளில் மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகளும் இணைந்து செய்யப்படுகின்றன.